
இந்தியாவில் நடைபெற்றுவரும் நடபாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நடைபெற்று வந்த முதலாவது காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் விதர்பா மற்றும் கர்நாடகாக அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய விதர்பா அணியானது அதர்வா டைடே மற்றும் கருண் நாயரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 460 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அதர்வா டைடே 109 ரன்களையும், கருண் நாயர் 90 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து களமிறங்கிய கர்நாடகா அணியில் சமர்த் 59, நிகின் ஜோஸ் 82 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் அந்த அணி 286 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.
இதன்மூலம், 174 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த விதர்பா அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 196 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக துருவ் ஷரே 57 ரன்களையும், கருண் நாயர் 34 ரன்களையும் சேர்த்தனர். கர்நாடகா அணி தரப்பில் வித்வாத் கவரெப்பா அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளையும், விஜயகுமார் வைஷக் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.