
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதிச்சுற்று ஆட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் ஹரியானா மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி ஷம்ஸ் முலானி, தனூஷ் கோட்டியான் ஆகியோரின் அபார ஆட்டத்தால் 315 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக தனூஷ் கோட்டியான் 97 ரன்களையும், ஷம்ஸ் முலானி 91 ரன்களையும் சேர்த்தனர். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஹரியானா அணிக்கு கேப்டன் அங்கித் குமார் சதமடித்து அசத்தியதுடன் 136 ரன்களைக் குவித்தார். அவரைத்தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறியதன் காரணமாக அந்த அணி முதல் இன்னிங்ஸில் 301 ர்னகளை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
அதன்பின் 14 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை அணியில் கேப்டன் அஜிங்கியா ரஹானே சதம் விளாசினார். இதில் அவர் 108 ரன்களைச் சேர்க்க, அவருடன் இணைந்து விளையாடிய சூர்யகுமார் யாதவ் 70 ரன்களை அடித்தார். மேற்கொண்டு சோனு லத் 43 ரன்களையும், ஷிவம் தூபே 48 ரன்களையும் சேர்த்ததன் மூலம் அந்த அணி 339 ரன்களைச் சேர்த்ததுடன், ஹரியானா அணிக்கு 345 ரன்கள் என்ற இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.