
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25 சீசனின் முதல் கட்ட போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டம் ஜனவரி 23ஆம் தேதி முதல் தொடங்கியது. இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ஷுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் பங்கேற்று விளையாடியனர்.
இதில் ஷுப்மன் கில் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அபாரமாக விளையாடி தங்கள் ஃபார்மை நிரூபித்த நிலையில், ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெஸ்வால் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் சோபிக்க தவறினர். இதனால் அவர்களின் பேட்டிங் ஃபார்ம் குறித்த கேள்விகளும் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து நடப்பு ரஞ்சி கோப்பை தொடரின் அடுத்த சுற்று போட்டிகள் ஜனவரி 30ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அடுத்த சுற்று ரஞ்சி கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, கேஎல் ராகுல், முகமது சிராஜ், ரியான் பராக் உள்ளிட்டோர் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. அதேசமயம் முந்தைய சுற்றுகளில் விளையாடிய ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்கள் 30ஆம் தேதி நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கமாட்டார்கள் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.