
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடரின் 2024-25ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இரண்டாவது அரையிறுதி போட்டியில் விதர்பா மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்ப அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய விதர்பா அணியில் துருவ் ஷோரே 74 ரன்களையும், டேனிஷ் மாலேவார் 79 ரன்களையும், யாஷ் ரத்தோட் 54 ரன்களையும் சேர்த்து அசத்தினர். மேற்கொண்டு மற்ற வீரர்களும் ஓரளவு ரன்களைச் சேர்த்ததன் மூலம் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 383 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. மும்பை அணி தரப்பில் ஷிவம் தூபே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை அணியில் ஆயுஷ் மத்ரே 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சித்தேஷ் லத் 35 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் ரஹானே 18 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 0, ஷிவம் தூபே ரன்கள் 0, ஷம்ஸ் முலானி 4, ஷர்துல் தாக்கூர் 37 என விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பாக விளையாடி வந்த ஆகாஷ் ஆனந்த் சதமடித்து அசத்திய கையோடு 106 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவருடன் இணைந்து விளையாடிய தனுஷ் கோடியானும் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 270 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. விதர்பா தரப்பில் பரத் ரேகாடே 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 113 ரன்கள் முன்னிலையுடன் விதர்பா அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.