
அக்டோபர் இறுதியில் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் தயாரிப்பாக ஆசியக் கோப்பை தொடர் அமைந்துள்ளது. இந்த ஆசியக் கோப்பையில் சிறப்பாக செயல்படும் இந்திய வீரர்களுக்கு, டி20 உலகக் கோப்பையில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்பதால், இத்தொடர் மிகமுக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஒருவேளை இத்தொடரில் சொதப்பும் பட்சத்தில் வீரர்களுக்கு மறுவாய்ப்பே கிடையாது. காரணம், செப்டம்பர் 11ஆம் தேதி ஆசியக் கோப்பை முடிந்த உடனே செப்டம்பர் 15ஆம் தேதி டி20 உலகக் கோப்பைக்கான அணிகள் பட்டியலை ஐசிசியிடம் கொடுத்துவிட வேண்டும். இதனால், ஆசியக் கோப்பையில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் தங்களது திறமையை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
இந்திய அணியைப் பொறுத்தவரை ஆசியக் கோப்பையில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் மிகச்சிறப்பாகத்தான் செயல்பட்டுள்ளது. ஃபார்ம் அவுட்டில் இருந்த கோலி பாகிஸ்தான், ஹாங்ஹாங்கிற்கு எதிராக சிறந்த முறையில்தான் ரன்களை குவித்திருக்கிறார். குறைந்த பந்துகளில் ரன்களை குவிக்கவில்லை என்ற குறை மட்டுமே இருக்கிறது. இந்த குறையை கோலி விரைவில் சரிசெய்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.