
ஐபிஎல் தொடரின் 13ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியில், ஷுப்மன் கில் 39(31) ரன்கள், சாய் சுதர்சன் 53(38) ரன்கள் அடித்துக்கொடுக்க, கடைசியில் வந்து வானவேடிக்கை காட்டிய விஜய் சங்கர் 24 பந்துகளில் 5 சிக்ஸர்ஸ், 4 பவுண்டரிஸ் உட்பட 63 ரன்கள் விளாசினார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது குஜராத் அணி.
இதையடுத்து, 205 ரன்கள் எனும் இமாலய இலக்கை துரத்தியபோது 2 விக்கெட்டுகள் இழந்து கொல்கத்தா அணி தடுமாறியது. 3ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் மற்றும் நிதிஷ் ராணா இருவரும் அபாரமாக ஆடினர். இந்த ஜோடி 100 ரன்கள் சேர்த்தது. நிதிஷ் ராணா 45(29) ரன்கள், வெங்கடேஷ் ஐயர் 83(40) அடித்து அவுட்டாகினர். 16 ஓவர்களில் 155 ரன்கள் அடித்து நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது கொல்கத்தா அணி. கடைசி நான்கு ஓவர்களில் வெற்றிக்கு 50 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
முதல் மூன்று ஓவர்களில் 35 ரன்கள் வாரிகொடுத்த ரஷித் கான் தனது நான்காவது ஓவரை வீச வந்தார். ஆட்டத்தின் மிக முக்கியமான 17 ஆவது ஓவரில் டேஞ்சராக காணப்பட்ட ஆண்ட்ரே ரஸல் விக்கெட்டை முதல் பந்தில் தூக்கினார். அடுத்து உள்ளே வந்த சுனில் நரைன் விக்கெட்டை இரண்டாவது பந்தில் எடுத்து, ஹாட்ரிக் வாய்ப்பை பெற்றார்.