நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் ரஷித் கானிற்கு ஓய்வு; காரணம் இது தான்!
ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் காயம் காரணமாகவே நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும், அதனைத்தொடர்ந்து இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 09 முதல் 13ஆம் தேதிவரை நொய்டாவில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான நியூசிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிம் சௌதீ தலைமையிலான நியூசிலாந்து டெஸ்ட் அணியில் டாம் லேதம் துணைக்கேப்டனாக மீண்டும் செயல்படவுள்ளார். மேற்கொண்டு வில்லியம் ஓ ரூர்க் மற்றும் பென் சீயர்ஸ் ஆகியோருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுடம் காயம் காரணமாக நீண்ட காலமாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்த மைக்கேல் பிரேஸ்வெல் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
Trending
இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இதில் அணியின் நட்சத்திர வீரரான ரஷித் கானிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ரஷித் கான் தேர்வு செய்யப்படாதது குறித்து ஆஃப்கனிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் எந்தவொரு காரணமும் இதுவரை கூறப்படவில்லை. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ரஷித் கான் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இங்கிலாந்தில் நடைபெற்று வந்த தி ஹண்ட்ரெட் கிரிக்கெட் தொடரில் டிரெண்ட் ராக்கெட்ஸ் அணிக்காக விளையாடிய ரஷித் கான் காயமடைந்ததுடன் தொடரில் இருந்து பாதியில் விலகினார். இந்நிலையில் அவர் தனது காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத காரணத்தால் தான் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே கடந்த் 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு ரஷித் கான் முதுகுவலி காரணமாக கடந்தாண்டு நவம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்திருந்தார். இதனால் அவர் ஐந்து மாதங்கள் கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே இருந்தார். அதன்பின் கடந்த மார்ச் மாதம் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரின் போது மீண்டும் வந்தார். பிறகு அவர் ஐபிஎல், டி20 உலகக் கோப்பை உள்ளிட்ட தொடர்களில் முழுமையாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் அணி: ஹஸ்மத்துல்லா ஷாஹிதி (கே), இப்ராஹிம் ஸத்ரான், ரியாஸ் ஹசன், அப்துல் மாலிக், ரஹ்மத் ஷா, பஹீர் ஷா மஹ்பூப், இக்ராம் அலிகில், ஷாஹிதுல்லா கமால், குல்பதின் நைப், அஃப்ஸர் ஸஸாய், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ஜியாவுர்ரஹ்மான் அக்பர், ஷம்சுர்ரஹ்மான், கைஸ் அஹ்மத், ஜாஹிர் கான், நிஜாத் மசூத், ஃபரித் அஹ்மத் மாலிக், நவீத் சத்ரான், கலீல் அஹ்மத், யமா அரப்.
Also Read: Funding To Save Test Cricket
நியூசிலாந்து டெஸ்ட் அணி: டிம் சௌதீ (கே), டாம் பிளென்டல், மைக்கேல் பிரேஸ்வெல், டெவான் கான்வே, மேட் ஹென்றி, டாம் லேதம், டேரில் மிட்செல், வில்லியம் ஓ ரூர்க், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், கேன் வில்லியம்சன், வில் யங்.
Win Big, Make Your Cricket Tales Now