
ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டி20 போட்டியில் அயர்லாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி முகமது நபி மற்றும் ரஷித் கான் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக முகமது நபி 59 ரன்களையும், ரஷித் கான் 25 ரன்களையும் சேர்த்தனர். அயர்லாந்து அணி தரப்பில் மார்க் அதிர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணியில் ஆண்ட்ரு பால்பிர்னி 45 ரன்களையும், கரேத் டெலானி 39 ரன்களையும் சேர்த்து அணியின் வெற்றிக்காக போராடினர். ஆனாலும் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.