
இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை நேற்று டெல்லியில் நடைபெற்ற லீக் போட்டியில் வலுவான நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை அசால்டாக 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் ரஹ்மத்துல்லா குர்பாஸ் 80, இக்ரம் அலிகில் 58 ரன்கள் எடுத்த உதவியுடன் 285 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
ஆனால் அதை சேசிங் செய்த இங்கிலாந்து ஆரம்பம் முதலே ஆஃப்கானிஸ்தானின் சிறப்பான பந்து வீச்சில் சீரான இடைவேலைகளில் விக்கெட்களை இழந்து 215 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 66 ரன்கள் எடுக்க ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக முஜீப் உர் ரகுமான், ரசித் கான் தலா 3 விக்கெட்களும் முகமது நபி 2 விக்கெட்டுகளும் எடுத்து சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தினார்.
இதன்மூலம் உலகக் கோப்பையில் 14 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து ஆஃப்கானிஸ்தான் அசத்தியது. அதை விட உலக அரங்கில் வலுவான அணியாக திகழும் இங்கிலாந்துக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து தோல்வியை மட்டுமே பதிவு செய்து வந்த ஆப்கானிஸ்தான் இப்போட்டியில் முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்து சரித்திரத்தை மாற்றி எழுதியது.