
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது, டாப் ஆர்டரில் பந்துவீச்சாளர்களே இல்லை என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நானும் விராட் கோலியும் சில ஓவர்கள் பந்துவீசிவோம் என்று ரோஹித் சர்மா பதில் அளித்தார். அதன்பின் உலகக்கோப்பை தொடங்கியுள்ள இந்திய அணி 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
நாளை நடக்கவுள்ள போட்டியில் வங்கதேச அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கவுள்ளது. இதற்காக 3 நாட்களுக்கு முன்பாகவே இந்திய அணி வீரர்கள் புனே வந்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் திங்களன்றே பயிற்சியில் ஈடுபட்டனர். அந்த பயிற்சியில் அனைத்து வீரர்களும் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பயிற்சியில் அனைத்து இந்திய வீரர்களும் பயிற்சியில் பங்கேற்றனர்.
அப்போது விராட் கோலி வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்த்தும், ஸ்ரேயாஸ் ஐயர் த்ரோ டவுன் ஸ்பெஷலிஸ்ட்களிடம் பயிற்சியில் ஈடுபட்டார். அதேபோல் இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோரும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் பயிற்சியில் ஈடுபடாமல், திடீரென பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டார்.