அனில் கும்ப்ளே சாதனையை முறியடித்த ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய மண்ணில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் ராஞ்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் துருவ் ஜுரெல் 90 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 73 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்கவில்லை. இதனால் மூன்றாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனாது. இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Trending
அதன்பின் 46 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலி - பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இந்திய அணி தரப்பில் முதல் ஓவரை ரவிச்சந்திரன் அஸ்வின் வீசினார். இப்போட்டியில் ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் அதன்பின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தார்.
இப்போட்டியில் பென் டக்கெட் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஐந்தாவது ஓவரை வீசிய அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய ஒல்லி போப் அடுத்த பந்திலேயே தனது விக்கெட்டை இழக்க, அஸ்வின் தனது மூன்றாவது ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் இங்கிலாந்து அணி 19 ரன்களிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்நிலையில் இப்போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனையை படைத்துள்ளார். அதன்படி இந்த இரு விக்கெட்டுகள் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 350 விக்கெட்டுகளை நிறைவு செய்தார். அதுமட்டுமின்றி ஒல்லி போப்பின் விக்கெட்டானது அவரது 351ஆவது விக்கெட்டாக அமைந்தது.
இதன்மூலம் இந்திய அணிக்காக இந்திய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி வீரர் எனும் முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் முறியடித்துள்ளார். முன்னதாக அனில் கும்ப்ளே இந்தியாவில் 63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 350 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அதனைத் தற்போது அஸ்வின் 59 டெஸ்ட் போட்டிகளில் 352 விக்கெட்டுகளை கைப்பற்றி முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
R Ashwin Continues To Break Records! #INDvENG #India #England #ravichandranashwin #anilkumble pic.twitter.com/BunJAN1Cie
— CRICKETNMORE (@cricketnmore) February 25, 2024
இந்திய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள்
- ரவிச்சந்திரன் அஸ்வின் - 352 விக்கெட்டுகள் (59 போட்டிகளில்)*
- அனில் கும்ப்ளே - 350 விக்கெட்டுகள் (63 போட்டிகளில்)
- ஹர்பஜன் சிங் - 265 விக்கெட்டுகள் (55 போட்டிகளில்)
- கபில் தேவ் - 219 விக்கெட்டுகள் (65 போட்டிகளில்)
- ரவீந்திர ஜடேஜா - 210 விக்கெட்டுகள் (43 போட்டிகளில்)*
Win Big, Make Your Cricket Tales Now