
இந்தியா - இங்கிலாந்து இடையே ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கி நடந்தது. இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா கொரோனா காரணமாக ஆடாததால் ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டன்சி செய்தார்.
எட்ஜ்பாஸ்டனில் நடந்த இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 98 ரன்களுக்கே ஷுப்மன் கில், புஜாரா, விஹாரி, கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இக்கட்டான நிலையில் இருந்த இந்திய அணியை ரிஷப் பந்தும் ஜடேஜாவும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி இருவருமே சதமடித்து காப்பாற்றினர்.
89 பந்தில் சதமடித்த ரிஷப் பந்த், 146 ரன்களை குவித்தார். ஜடேஜா 104 ரன்களை குவித்தார். 6வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 222 ரன்களை குவித்தனர். கடைசி நேரத்தில் பும்ரா அதிரடியாக ஆடி 16 பந்தில் 31 ரன்களை விளாசினார். ஸ்டூவர்ட் பிராடின் ஒரே ஓவரில் பும்ரா 29 ரன்களை அடித்தார். அந்த ஓவரில் மட்டும் இந்திய அணிக்கு 35 ரன்கள் கிடைக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.