
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி பதவி வகித்த காலத்தில், சிறந்த டெஸ்ட் அணிகளில் ஒன்றாக இந்தியா மாறியது. ரவி சாஸ்திரியின் பயிற்சியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் இருமுறை தொடர் வெற்றிகளைப் பதிவு செய்தது, மேலும் சர்வதேச டெஸ்ட் போட்டி தரவரிசைப் பட்டியலில் இந்தியா நீண்டகாலம் முதலிடம் வகித்தது.
இருப்பினும், ரவி சாஸ்திரியின் கீழ் இந்திய அணி சாதிக்கத் தவறிய ஒரு விஷயம் உலகக்கோப்பை சாம்பியன் பட்டம். 2021இல் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் இந்தியா தோற்றது. 2019 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றுடன் வெளியேறியது. சென்ற ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதுவரை ஒரு ஐசிசி உலகக் கோப்பை கூட வெல்லாத இந்தியாவின் தலைமைப் பயிற்சியாளர் என்ற கறை ரவி சாஸ்திரியின் மீது இருக்கும் நிலையில், அதுகுறித்து மனம்திறந்து பேசியுள்ளார்.