விராட் கோலி - கௌதம் கம்பீர் மோதல்: ரவி சாஸ்திரி எச்சரிக்கை!
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் நேருக்கு நேர் கடுமையாக மோதிக்கொண்ட கௌதம் கம்பீர் - விராட் கோலி ஆகியோரை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எச்சரித்துள்ளார்.
கிரிக்கெட் மட்டுமல்ல எந்த விளையாட்டாக இருந்தாலும், எதிரெதிர் அணி வீரர்கள் மோதிக்கொள்வது வழக்கம். சில வீரர்கள் களத்தில் ஆக்ரோஷமாக இருப்பது அவர்களது சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவர உதவும். அப்படியான வீரர்கள் இருவரும் நேருக்கு நேர் மோதினால் மோதல் கடுமையாக இருக்கும்.
இதற்கு மிகச்சிறந்த உதாராணம் கம்பீர் - கோலி. இருவருமே சண்டையை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பவர்கள். இருவரும் எதிரெதிர் அணிகளில் ஆடினால் ஆடுகளம் ரணகளமாகத்தான் இருக்கும். 2013 ஐபிஎல்லில் கேகேஆர் - ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது கம்பீரும் கோலியும் களத்தில் கடுமையாக மோதிக்கொண்டனர்.
Trending
அதன்பின்னர் இருவரும் களத்தில் சந்தித்துக்கொள்ளும்போது சுமூகமாக இருப்பதாக காட்டிக்கொண்டாலும் இருவருக்கும் இடையே பனிப்போர் இருந்துவந்தது. இருவருமே ஆக்ரோஷமானவர்கள் என்பதால் இவர்கள் இருவரும் மோதும் போட்டிகளில் விக்கெட் மற்றும் வெற்றியை ஆவேசமாக கொண்டாடக்கூடியவர்கள். அதுவே சில சமயங்களில் மோதலுக்கு வழிவகுத்துவிடும்.
இப்போது கம்பீர் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்துவரும் நிலையில், இந்த சீசனில் லக்னோ - ஆர்சிபி இடையேயான போட்டிக்கு பின் இருவருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. களத்தில் இருவரும் நேருக்கு நேர் மோதி வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இருவருக்கும் போட்டி ஊதியம் முழுவதுமாக அபராதம் விதிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட்டின் முன்னோடி வீரர்களாக திகழும் இருவர் மோதிக்கொள்வது சரியல்ல என்றும், இதுமாதிரியான பக்குவமற்ற மோதல்களை நிறுத்த வேண்டும் என்றும், அடுத்த தலைமுறை வீரர்களுக்கு தவறான வழிகாட்டுதலாக அமையும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது என்றும் வலியுறுத்தல்கள் வலுத்தன.
இந்நிலையில், கம்பீர் மற்றும் கோலி குறித்து பேசிய ரவி சாஸ்திரி, “களத்தில் சில மோதல்கள் தேவை தான். ஆனால் அதன் எல்லை மீறாமல் ரெஃப்ரி பார்த்துக்கொள்ள வேண்டும். கிரிக்கெட்டுக்கு இதுமாதிரியான மோதல்கள் நல்லதல்ல; தவறான உதாரணமாகிவிடும் என்றால், அதை ஏன் டிவியில் காட்ட வேண்டும்? தவிர்த்துவிடலாமே? என்று கேள்வி எழுப்பப்படுகிறது. சரியான கேள்விதான். அதை டிவியில் காட்டுவதில் நல்லதும் இருக்கிறது. அது என்னவென்று நான் சொல்கிறேன்.
இதை ஒருமுறை டிவியில் காட்டும்போது சம்மந்தப்பட்ட வீரர்கள் அடுத்தமுறை இதுமாதிரியான மோதலில் ஈடுபடுவதற்கு முன் அது டிவியில் காட்டப்படும். நம்மை கேமராக்கள் கண்காணிக்கின்றன என்று சுதாரிப்புடன் நடந்துகொள்வார்கள். ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்டுவிட்டது. எனவே அவர்கள் இனியாவது சுதாரிப்பாக நடக்க வேண்டும். இல்லையெனில் தடையை சந்திக்க நேரிடும்” என்று எச்சரித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now