Advertisement

கும்ப்ளே, வார்னே சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அஸ்வின்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்குவதன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan February 29, 2024 • 21:49 PM
கும்ப்ளே, வார்னே சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அஸ்வின்!
கும்ப்ளே, வார்னே சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அஸ்வின்! (Image Source: Google)
Advertisement

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் என வெற்றியைப் பதிவுசெய்துள்ளனர். இதன் மூலம் இந்திய அணி இத்தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களு தயாராகி வருகின்றன. இதில் இந்திய அணி தொடரை வெற்றியுடன் முடிக்கும் முனைப்புடனும், இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றியைத் தேடும் முனைப்புடனும் இப்போட்டியை எதிர்கொள்ள உள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Trending


இந்நிலையில் இப்போட்டியில் விளையாடுவதன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100ஆவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவுள்ளார். இதன்மூலம் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14ஆவது வீரர் எனும் சாதனையை அஸ்வின் படைக்கவுள்ளார். மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவர் 100 டெஸ்ட்  போட்டிகளில் விளையாடுவதும் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முன்னதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணமச்சாரி ஸ்ரீகாந்த், முரளி விஜய், தினேஷ் கார்த்திக் ஆகியோர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடினாலும் அவர்கள் யாரும் 100 டெஸ்ட் போட்டிகளை விளையாடியது கிடையாது. இதுவரை இந்திய அணிக்காக 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 3,309 ரன்களையும், 507 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். 

அதேசமயம், இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது பேட்டிங் செய்யும் பட்சத்தில் அனில் கும்ப்ளே, ஷேன் வார்னே ஆகியோரது சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு அஸ்வினுக்கு கிடைக்கும். அதன்படி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் கிரிக்கெட்டின் மூன்றாவது இன்னிங்ஸில் அதிகபட்ச 5 விக்கெடுகளை கைப்பற்றியவர்கள் பட்டியளில் முத்தையா முரளிதரன் 21 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். 

அவரைத்தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின், அனில் கும்ப்ளே, ஷேன் வார்னே ஆகியோர் தலா 12 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து எதிராக அஸ்வின் மூன்றாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் அனில் கும்ப்ளே, ஷேன் வார்னே ஆகியோரை பின்னுக்குத் தள்ளி அஸ்வின் சாதனை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக இங்கிலாந்து அணிக்கெதிரான நனகாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிகமுறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் இலங்கை அணியின் ரங்கனா ஹெர்த்தை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்திற்கு அஸ்வின் முன்னேறினார். இதில் இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் 45 முறை கைப்பற்றி முதலிடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 27 முறை கைப்பற்றி இரண்டாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement