
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறுவதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. மேலும் இந்தியாவில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான சூழல் இருப்பதன் காரணமாக அஸ்வின், ஜடேஜா, குல்தீப், அக்ஸர் என நான்கு உலகத்தரம் வாய்ந்த் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.
அதேசமயம் சமீப காலமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பயிற்சியாளர் பிராண்டன் மெக்கல்லம் தலைமையிலான இங்கிலாந்து அணி பாஸ்பால் எனும் அதிரடியான அணுகுமுறையை கடைபிடித்து வெற்றிகளை குவித்து வருகிறது. அவர்களின் இந்த அதிரடியான அணுகுமுறை இந்திய மைதானங்களில் எடுபடுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணை சாதனை ஒன்றை படைக்கவுள்ளனர். அதன்படி இத்தொடரில் இருவரும் இணைந்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில், இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜோடி என்ற சாதனையை படைக்கவுள்ளனர்.