
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியின் மூலம் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். இதைத்தொடர்ந்து டாஸ் வென்று முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 212 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் சதம் விளாசினர். அதேபோல் அணியின் இளம் வீரர்கள் தேவ்தத் படிக்கல், சர்ஃப்ராஸ் கான் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தங்களது பங்கிற்கு அரைசதங்களை விளாசியதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 477 ரன்களை குவித்ததுடன், முதல் இன்னிங்ஸில் 259 ரன்கள் முன்னிலையும் பெற்று அசத்தியது.
இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியால் ரவிச்சந்திரன் அஸ்வினின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணியில் ஜோ ரூட்டை தவிர மற்ற பேட்டர்கள் அரைசதம் கூட அடிக்காமல் பெவிலியன் திரும்பியதால் அந்த அணி 195 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரவிச்சந்திரன அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.