சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஸ்வின்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. அதன்படி விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 131 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களையு, அறிமுக வீரர் சஃப்ராஸ் கான் 62 ரன்களையும் சேர்த்தனர்.
இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தாலும், 445 ரன்களைக் குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 4 விக்கெட்டுகளையும், ரெஹான் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி வழக்கம் போல் தங்களது பாஸ்பால் யுக்தியைப் பயன்படுத்தி மளமளவென ஸ்கோரை உயர்த்தினர்.
Trending
அதிலும் அந்த அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் 39 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். இதனால் இந்த இணையை பிரிக்க முடியாமல் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் தடுமாறினர். அதன்பின் பந்துவீச வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தனது மூன்றாவது ஓவரின் முதல் பந்திலேயே இங்கிலாந்து வீரர் ஸாக் கிரௌலியின் விக்கெட்டை கைப்பற்றி அந்த கூட்டணியை உடைத்தார்.
இந்த விக்கெட்டின் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 500ஆவது விக்கெட்டை பதிவுசெய்து அசத்தியதுடன், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் எனும் சாதனையையும் படைத்தார். முன்னதாக இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருக்கும் நிலையில், அஸ்வின் 98 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
மேலும் இந்திய அணி தரப்பில் இச்சாதனையை படைக்கும் இரண்டாவது பந்துவீச்சாளர் எனும் பெருமையையும் அஸ்வின் பெற்றுள்ளார். முன்னதாக முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 619 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். அதேசமயம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை கைப்பற்றிய 9ஆவது வீரராகவும் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது பெயரை பதிவுசெய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
R Ashwin Joins 500 Club! #INDvENG #India #England #CricketTwitter #RavichandranAshwin pic.twitter.com/h6makeUea7
— CRICKETNMORE (@cricketnmore) February 16, 2024
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை கடந்த வீரர்கள்
- முத்தையா முரளிதரன் (இலங்கை) - 800 விக்கெட்டுகள்
- ஷேன் வார்னே (ஆஸ்திரேலியா) - 708 விக்கெட்டுகள்
- ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து) - 696 விக்கெட்டுகள்
- அனில் கும்ப்ளே (இந்தியா) - 619 விக்கெட்டுகள்
- ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து) - 604 விக்கெட்டுகள்
- கிளென் மெக்ராத் (ஆஸ்திரேலியா) - 563 விக்கெட்டுகள்
- கர்ட்னி வால்ஷ் (வெஸ்ட் இண்டீஸ்) - 519 விக்கெட்டுகள்
- நாதன் லையன் (ஆஸ்திரேலியா) - 517 விக்கெட்டுகள்
- ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) - 500 விக்கெட்டுகள்
Win Big, Make Your Cricket Tales Now