
இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று நடைபெற்றது. ஈரப்பதம் காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஸகிர் ஹசன் மற்றும் ஷத்மான் இஸ்லாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் நிதான தொடக்கத்தை கொடுத்த நிலையில், 24 பந்துகளை எதிர்கொண்ட ஸகிர் ஹசன் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து 24 ரன்களை எடுத்திருந்த ஷத்மான் இஸ்லாமும் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த பெவிலியன் திரும்பினார்.
இதனால் வங்கதேச அணி 29 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த மொமினுல் ஹக் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இதில் இருவரும் இணைந்து தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசியதன் மூலம் அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயர்ந்தது.