
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஓவல் மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் எடுத்து 173 ரன்கள் பின் தங்கியிருந்தது. இதையடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
பின்னர், 443 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட இந்திய அணி ஆடியது. இதில், ரோஹித் சர்மா 43 ரன்களும், விராட் கோலி 49 ரன்களும், அஜிங்கியா ரஹானே 46 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியாக இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்து 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் இப்போட்டியில் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் தேர்வு செய்யப்படாதது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஓவலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் தற்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் லீக் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.