
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது. இப்போட்டிக்கான இரு அணி வீரர்களையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. மேற்கொண்டு இரு அணி வீரர்கள் தற்சமயம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடிப்பதில் இருந்து இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடிப்பது வரை இந்த் டெஸ்ட் தொடரில் பல சாதனைகளை படைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.
அந்த வகையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேச அணிக்கு எதிராக முன்னாள் ஜாம்பவான் வீரர் ஜாகீர் கான் 31 விக்கெட்டுகள் எடுத்துள்ளதே இதுநாள் வரை சாதனையாக இருந்து வருகிறது. அவருக்கு அடுத்த இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் 23* விக்கெட்டுகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளார். இந்நிலையில் இந்த தொடரில் அஸ்வின் மேற்கொண்டு 9 விக்கெட்டுகளை கைபற்றும் பட்சத்தில் ஜாகீர் கானை பின்னுக்கு தள்ளி முதலிடத்திப் பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.