
இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை கோலாகலமாக தொடங்கவுள்ளது. அதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் டாப் கிரிக்கெட் அணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இருப்பினும் பும்ரா உள்ளிட்ட முதன்மை வீரர்கள் காயத்திலிருந்து இன்னும் குணமடையாமல் இருப்பது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி வரும் நிலையில் மிடில் ஆர்டரில் இடதுகை வீரர்கள் இல்லாததும் முக்கிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. ஆனால் எது எப்படியிருந்தாலும் இந்த உலகக் கோப்பை தொடங்க இன்னும் 60 நாட்கள் கூட இல்லாத காரணத்தால் நிறைய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கோப்பையை வெல்லப் போகும் அணிகள் பற்றிய கணிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.
குறிப்பாக லீக் சுற்றில் அசத்தி உலகக் கோப்பையை தொடுவதற்கான வாய்ப்பு கொடுக்கும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறப் போகும் டாப் 4 அணிகள் யார் என்ற கணிப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. அதில் எடுத்த எடுப்பிலேயே வெளிநாட்டில் தடுமாறினாலும் சொந்த மண்ணில் புலியாக கருதப்படும் இந்தியா முதல் அணியாக இருக்கும் என்று கிளன் மெக்ராத், இயன் மோர்கன் போன்ற வெளிநாட்டவர்கள் கணித்து வருகிறார்கள். இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் வரும் ஐசிசி தொடர் தொடங்கும் போது இந்தியா தான் வெல்லும் என்று ஆரம்பத்திலேயே வாயை விடுவது வெளிநாட்டவர்களுக்கு வாடிக்கையாக போய்விட்டதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.