
வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து டிசம்பர் 22ஆம் தேதியன்று மிர்பூரில் தொடங்கிய 2ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 227 ரன்களுக்கு அவுட்டானது. அதிகபட்சமாக மோனிமுல் ஹைக் 84 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் மற்றும் அஷ்வின் தலா 4 விக்கெட்டுகள் எடுத்தனர்.
அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஒரு கட்டத்தில் 94/4 என தடுமாறினாலும் ரிஷப் பந்த் 93 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினர். அதனால் 314 ரன்கள் குவித்த இந்தியாவை ஆல் அவுட்டாக்கிய வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் மற்றும் டைஜூல் இஸ்லாம் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதன் பின் 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய வங்கதேசம் மீண்டும் இந்தியாவின் கட்டுக்கோப்பான பந்து வீச்சில் 231 ரன்களுக்கு அவுட்டானது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 73 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
இறுதியில் 145 என்ற சுலபமான இலக்கை சேசிங் செய்த இந்தியாவுக்கு கேஎல் ராகுல் 2, கில் 7, புஜாரா 6, விராட் கோலி 1 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 45/4 என தடுமாறிய இந்தியாவின் வெற்றிக்கு மேற்கொண்டு 100 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இன்று நடைபெற்ற 4வது நாளில் காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட ரிஷப் பண்ட் 9 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். போதாகுறைக்கு மறுபுறம் போராடிய அக்சர் படேல் 34 ரன்களுக்கு அவுட்டானதால் 74/7 என தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை 8வது விக்கெட்டுக்கு நங்கூரமாக நின்று 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய ஸ்ரேயாஸ் ஐயர் 29 ரன்களும் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியாக விளையாடி 42 ரன்களும் எடுத்து காப்பாற்றினர்.