
இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி ஜூலை 1 முதல் 5ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டில் முதல் 4 டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்து, அதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.
கரோனா காரணமாக கடைசிப் போட்டி நடைபெறவில்லை. அப்போட்டிதான் தற்போது நடைபெறவுள்ளது. அதில் இந்தியா டிரா செய்துவிட்டால்கூட, தொடரை கைப்பற்றிவிடும். இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து, காயம் காரணமாக துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் விலகியதை அடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு கரோனா உறுதியானது.
ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இந்தியாவிலேயே கரோனா உறுதியானதால், இங்கிலாந்து புறப்படாமல் இருந்தார். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் விராட் கோலிக்கு கரோனா உறுதியாகி, மறுநாளே நெகடிவ் என வந்துவிட்டது. அடுத்து, நேற்று முன்தினம் ரோஹித் ஷர்மாவுக்கு கரோனா உறுதியானதாக தகவல் வெளியானது. அவருக்கு இன்னும் குணமடையவில்லை.