
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளி (செப்டம்பர் 19) தொடங்குகிறது. இப்போட்டிக்கான இரு அணி வீரர்களையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. மேற்கொண்டு இரு அணி வீரர்கள் தற்சமயம் சென்னையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா இந்திய அணிக்காக புதிய மைல் கல் ஒன்றை எட்டும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி இந்த டெஸ்ட் தொடரில் ஜடேஜா மேற்கொண்டு 6 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில், இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் மற்றும் 3000 ரன்களை குவித்த மூன்றாவது வீரர் எனும் பெருமைப் பெறவுள்ளார்.
இதுவரை இந்திய அணிக்காக 72 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரவீந்திர ஜடேஜா, பேட்டிங்கில் 3,036 ரன்களையும், பந்துவீச்சில் 294 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர். முன்னதாக இந்திய அணியைச் சேர்ந்த கபில் தேவ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த மைல் கல்லை எட்டிய இந்திய வீரர்கள் எனும் பெருமையை தங்கள் வசம் வைத்துள்ளனர்.