இங்கிலாந்தில் சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா!
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்ததன் மூலம் ரவீந்திர ஜடேஜா சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார்.

Ravindra Jadeja Record: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா 61 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்காக போராடினார்.
லார்ட்ஸில் நடைபெற்ற ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. மேலும் இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியை தோல்வியில் இருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் ரவீந்திர ஜடேஜா சிறப்பான பங்களிப்பை வழங்கினார். இதில் இந்திய அணி 71 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய தருணத்தில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா அரைசதம் கடந்து அணிக்கு நம்பிக்கையை உருவாக்கியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 61 ரன்களைச் சேர்த்து கடைசி வரையிலும் போராடினார்.
இந்த இன்னிங்ஸின் மூலம், ரவீந்திர ஜடேஜா ஒரு சிறப்பு சாதனையையும் படைத்துள்ளார். அதன்படிஇங்கிலாந்தில் இந்தியாவுக்காக தொடர்ச்சியாக நான்கு முறை 50+ ஸ்கோரை பதிவுசெய்த் மூன்றாவது இந்திய வீரர் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார். முன்னதாக, ரிஷப் பந்த் (5 முறை) மற்றும் சவுரவ் கங்குலி (4 முறை) ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளனர். மேற்கொண்டு இந்த சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய ஆல்ரவுண்டர் எனும் பெருமையையும் ஜடேஜா பெற்றுள்ளார்.
இங்கிலாந்தில் இந்தியாவுக்காக தொடர்ச்சியாக 50+ ஸ்கோர் அடித்த வீரர்கள்:
- ரிஷப் பந்த் - 5 முறை (2021–25)
- சவுரவ் கங்குலி - 4 முறை (2002)
- ரவீந்திர ஜடேஜா - 4 முறை (2025)*
முன்னதாக இத்தொடரில் பர்மிங்ஹாமில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா மிகச்சிறப்பாக செயல்பட்டிருந்தார். அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 89 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 69 ரன்களையும் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்நிலையில் தான் லார்ட்ஸில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 72 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 61 ரன்களையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
இப்போட்டி குறித்து பேசினால், இரு அணிகளும் முதல் இன்னிங்ஸில் 387 ரன்களைச் சேர்த்து ஸ்கோரை சமன்செய்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்களில் ஆட்டமிழந்து இந்திய அணிக்கு 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி இறுதிவரை போராடிய நிலையிலும் 22 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now