
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இதைத்தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன, 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்துள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது.
மேலும் இங்கிலாந்து அணிக்கெதிரான மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி இன்னும் ஒருசில தினங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயமடைந்தார். இதனைத்தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காக அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார்.