
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்று முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இரண்டு அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் லீக் போட்டியானது நாளை சென்னையில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் பங்கேற்பதற்கான மும்பை இந்தியன்ஸ் அணியானது நேற்றைய தினம் சென்னை வந்தடைந்தது. மேற்கொண்டு இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதன் காரணமாக இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, ஐபிஎல் வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத ஒரு தனித்துவமான சாதனையைப் படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
அதன்படி இத்தொடரில் ரவீந்திர ஜடேஜா மேற்கொண்டு 41 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில், ஐபிஎல் தொடரில் தனது 3000 ரன்களை பூர்த்தி செய்வார். இதனை செய்யும் பட்சத்தில் ஐபிஎல் தொடர் வரலாற்றில் 3ஆயிரம் ரன்கள் மற்றும் 150+ விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் எனும் சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதுவரை 240 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2959 ரன்களையும், 184 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.