
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 8ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இறுதி ஆட்டத்தில் 19 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்துத் தோற்றது.
இது டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்குக் கிடைத்த 6ஆவது சாம்பியன் பட்டமாகும். கடந்த 2018, 2020ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரிலும் வாகை சூடிய ஆஸ்திரேலியா, தொடர்ந்து 3ஆவது முறையாக (ஹாட்ரிக்) தற்போதும் கோப்பையை வென்றிருக்கிறது. அந்த அணி இவ்வாறு ஹாட்ரிக் கோப்பை வெல்வது இது 2ஆவது முறையாகும்.
இதற்கு முன் 2010, 2012, 2014 ஆகிய ஆண்டுகளிலும் அந்த அணி தொடர்ந்து சாம்பியனானது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மெக் லேனிங், 2014, 2018, 2020, 2023 ஆகிய ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையையும் 2022 ஒருநாள் உலகக் கோப்பையையும் வென்று அதிக ஐசிசி பட்டங்களை (5) வென்ற கேப்டன் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். அடுத்த இடங்களில் 4 ஐசிசி கோப்பைகளுடன் ரிக்கி பாண்டிங்கும் 3 ஐசிசி கோப்பைகளுடன் தோனியும் உள்ளார்கள்.