
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா சதமடித்து அசத்திய நிலையில், டெவான் கான்வே, டிம் சௌதீ ஆகியோரது அரைசதத்தின் காரணமாக முதல் இன்னிங்ஸில் 402 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 134 ரன்களையும், டெவான் கான்வே 91 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் குல்திப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோ 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் 366 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொட்ங்கிய இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசி அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய ரிஷப் பந்த் 99 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரும் தங்களது அரைசதங்களை பதிவுசெய்திருந்தனர்.