
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (டிசம்பர் 14) தொடங்கிய நிலையில், மழை குறுக்கிட்டதன் காரணமாக முதல்நாள் ஆட்டம் 13.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று 28 ரன்களை எடுத்த நிலையில் ஆஸ்திரேலிய அணி இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.
இதில் 21 ரன்களைச் சேர்த்த நிலையில் உஸ்மான் கவாஜாவும், 09 ரன்களைச் சேர்த்த நிலையில் நாதன் மெக்ஸ்வீனியும் அடுத்தடுத்து ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுஷாக்னேவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 12 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.இதனால் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் ஸ்மித் 25 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் இப்போட்டியில் உஸ்மான் கவாஜாவின் கேட்சை ரிஷப் பந்த் பிடித்ததன் மூலம் புதிய வரலாறு படைத்தார் . அதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக தனது 150ஆவது விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம் இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த மைல் கல்லை எட்டிய மூன்றாவது வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் இன்று படைத்துள்ளார்.