
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த். இவர் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரராக இருந்ததோடு டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகவும் இருந்தவர் . கடந்த வருடம் டிசம்பர் 30ஆம் தேதி ஏற்பட்ட விபத்து காரணமாக தற்போது குணமடைந்து வருகிறார் .டெல்லியில் இருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தபோது அவர் சென்ற கார் விபத்திற்குள்ளானது .
இந்த விபத்தில் இவரது மூட்டு மற்றும் முதுகு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது . இதனைத் தொடர்ந்து உத்ரகாண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பந்த் பிசிசிஐ அறிவுறுத்தலின்படி மும்பையில் உள்ள கோகிலா பெண் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் . இங்கு வைத்து ரிஷப் பந்திற்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவர் நடை பயிற்சி மற்றும் சிறு சிறு உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார் . ஆரம்பத்தில் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடந்து வந்த அவர் சில நாட்களுக்கு முன்பு எந்த ஒரு உபகரணத்தின் உதவியும் இல்லாமல் அவராகவே நடந்தார் . அதன் காணொளியையும் தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றி இருந்தார் . இவர் குணமாகி வரும் வேகத்தை பார்க்கும்போது 2023 உலக கோப்பைக்கு முன்பாகவே முழு உடர் தகுதியை பெற்றுவிடுவார் என்று பிசிசிஐ மருத்துவ குழு தெரிவித்து இருக்கிறது .