
நியூசிலாந்தில் விளையாடி வரும் இளம் இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றினாலும் அடுத்து நடைப்பெற்ற ஒருநாள் தொடரை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுக்கும் இத்தொடர் இளம் வீரர்களுக்கான வாய்ப்பாக கருதப்படும் நிலையில் காலம் காலமாக வாய்ப்புக்காக காத்துக் கிடக்கும் கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது அனைவரையும் கொந்தளிக்க வைத்தது.
மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சிய செயல்பாடுகளை வெளிப்படுத்திய காரணத்தால் அறிமுகமான 2017 முதல் டி20 கிரிக்கெட்டில் 65 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்பை பெற்றும் சுமாராக செயல்படாத ரிஷப் பந்த் ஒருநாள் போட்டிகளில் கடந்த ஜூலையில் இங்கிலாந்து மண்ணில் அடித்த சதத்தை தவிர்த்து பெரும்பாலும் சிறப்பாக செயல்பட்டதில்லை.
இருப்பினும் அவரை அடுத்த தலைமுறை விக்கெட் கீப்பராகவும் கேப்டனாகவும் உருவாக்க நினைக்கும் பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு சொதப்பலாகவே செயல்பட்டாலும் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருவது ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்துவது போல் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் பவர்பிளே ஓவர்களில் அசத்துவார் என்பதற்காக ஓப்பனிங் பேட்ஸ்மேனாக வாய்ப்பு கொடுத்த அணி நிர்வாகம் அவரை உள்ளங்கையில் வைத்து தாங்கி வருகிறது.