
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 13ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை குவித்தது.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் - பிரித்வி ஷா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 52 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 42 ரன்கள் எடுத்த நிலையில் பிரித்வி ஷாவும் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி அரைசதம் கடததுடன் 51 ரன்களைச் சேர்த்தார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அஜிங்கியா ரஹானே 45 ரன்களையும், டேரில் மிட்செல் 34 ரன்களையும் சேர்க்க, இறுதிவரை போராடிய மகேந்திர சிங் தோனி 37 ரன்களையும் சேர்த்ததைத் தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் 20 ஓவர்களில் 171 ரன்களை மட்டுமே எடுத்தது.