
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் வியாழன் (செப்டம்பர் 19) முதல் நடைபெறவுள்ளது. மேலும் இப்போட்டிக்கான இரு அணி வீரர்களும் சென்னை வந்தடைந்ததுடன், தங்களது பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக இருப்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகளும் உள்ளன.
இந்நிலையில் வங்கதேச அனிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். அந்தவகையில் இந்தப் போட்டியில் ரிஷப் பந்த் 7 சிக்சர்கள் அடித்தால், முன்னாள் கேப்டன்கள் கபில்தேவ், சவுரவ் கங்குலி ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடிப்பார்.
இந்திய அணிக்காக இதுவரை 33 டெஸ்டில் 56 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரிஷப் பந்த 55 சிக்சர்களை அடித்துள்ளார். அதேசமயம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் 131 டெஸ்டில் 184 இன்னிங்ஸில் விளையாடி 61 சிக்சர்களையும், சௌரவ் கங்குலி 113 டெஸ்டில் 188 இன்னிங்ஸில் 57 சிக்ஸர்களையும் அடித்து 6 மற்றும் 7ஆம் இடங்களில் நீடித்து வருகின்றனர். இந்த பட்டியலில் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் 90 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.