தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க ஏ அணி முதல் இன்னிங்ஸில் 309 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோர்டன் ஹார்மன் 71 ரன்களையும், சுபைர் ஹம்சா 66 ரன்களையும், ருபின் ஹர்மான் 54 ரன்களையும் சேர்த்தனர். இந்திய ஏ அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தனுஷ் கோட்டியான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய ஏ அணியில் ஆயூஷ் மாத்ரே 65 ரன்களையும், சாய் சுதர்ஷன் 32 ரன்களையும், ஆயுஷ் பதோனி 38 ரன்களையும் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இந்திய அணி 234 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் பிரனாலென் சுப்ராயன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.