தீவிர உடற்பயிற்சியில் ரிஷப் பந்த்; வைரலாகும் காணொளி!
கார் விபத்தில் சிக்கி மீண்டுள்ள இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் டி20 கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் சென்னை செப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியிலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் விதமாக நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து இதுவரை கோப்பையை வெல்லமுடியாமல் தவித்து வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது.
இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், அந்த விபத்தில் அடைந்த காயம் காரணமாக கடந்த ஓராண்டாக சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி எந்த ஒரு போட்டிகளிலும் பங்கேற்று விளையாடாமல் சிகிச்சை பெற்று வருகிறார். காயம் காரணமாக ஐபிஎல்மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் என பெரிய பெரிய தொடர்களை தவறவிட்ட ரிஷப் பந்த் எப்பொழுது கம்பேக் கொடுப்பார்? என்பதே பலரது கேள்வியாகவும் இருந்தது.
Trending
ஆனால் தனது காயத்திலிருந்து மீண்ட ரிஷப் பந்த் அதன்பின் பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் மீண்டும் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அதற்கேற்றவாரே அவர் விளையாடிவரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும் ரிஷப் பந்த் இந்த சீசனில் விளையாடுவது உறுதிசெய்திருந்தார். ஆனாலும் அவரால் முழு நேர விக்கெட் கீப்பிங் பேட்டராக விளையாட முடியுமா என்ற கேள்வியும் எழுந்திருந்தது.
Pushing the limits #RP17 pic.twitter.com/XyDmSWic3H
— Rishabh Pant (@RishabhPant17) February 27, 2024
இந்நிலையில், ரசிகர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கும் விதமாக சமீபத்தில் தாம் விக்கெட் கீப்பிங் பயிற்சி மேற்கொள்ளும் காணொளியை ரிஷப் பந்த் பதிவிட்டிருந்தனார். இதையடுத்து ஜிம்மில் தீவிரமாக பயிற்சி செய்துவரும் காணொளியை இன்று ரிஷப் பந்த் தனது சமூகவலை தள பக்கத்தில் பதிவுசெய்துள்ளார். இந்நிலையில் ரிஷப் பந்த்தின் இந்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன்மூலம் அவர் முழு உடற்தகுதியை எட்டிவிட்டதாகவும், இதனால் ஐபிஎல் தொடர் மட்டுமின்றி வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பிடிப்பார் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
அதேசமயம் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதல் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஐசிசியின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் 01ஆம் தேதி முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now