
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையே மெல்போர்னில் நடைபெற்றுவரும் நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 474 ரன்களையும், அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 369 ரன்களையும் சேர்த்து ஆல் அவுட்டானது.
அதன்பின் 105 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் லபுஷாக்னே - கம்மின்ஸின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் சரிவிலிருந்து மீட்டனர். இதில் லபுஷாக்னே 70 ரன்களையும், பாட் கம்மின்ஸ் 41 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழக்க, இறுதியில் நாதன் லையனும் தனது பங்கிற்கு 41 ரன்களைச் சேர்க்க ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்களைச் சேர்த்தது.
இதன்மூலம் இந்திய அணிக்கு 340 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணி உணவு இடைவேளைக்கு முன்னதாகவே ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோரது விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்துள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பந்த் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சாரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர்.