
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் 2 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜோஸ் பட்லர், ஷாருக் கான் தலா 36 ரன்களில் விக்கெட்டை இழக்க, சிறப்பான் ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்ஷன் 82 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனுமூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் அணியில் துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்க்ஷனா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய ஷிம்ரான் ஹெட்மையர் அரைசதம் கடந்ததுடன் 52 ரன்களிலும், கேப்டன் சஞ்சு சாம்சன் 42 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர்.இதனால் ராஜஸ்தான் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குஜராத் தரப்பில் பிரஷித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், ரஷித் கான், சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.