
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருபவர் ரியான் பராக். அசாம் மாநிலத்தில் இருந்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஒரே வீரரும் அவர் தான். இதன் காரணமாக ரியான் பராக் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும். அசாம் மாநிலத்தில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடத்தப்பட்ட போது, அவருக்கு அளிக்கப்பட்ட ஆதரவு பலர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஆனால் எதிர்பார்ப்புகளை ரியான் பராக் பூர்த்தி செய்யவில்லை. இதனால் அவர் மீது ரசிகர்கள் அதிக விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் ஐபிஎல் தொடரில் சொதப்பினாலும், உள்ளூர் கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி மற்றும் விஜய் ஹசாரே கோப்பை உள்ளிட்ட தொடர்களில் விஸ்வரூபம் எடுத்தார். இதன் காரணமாக இந்திய ஏ அணியில் ரியான் பராக்கிற்கு இடம் கிடைத்தது.
இந்த நிலையில் ரஞ்சி கோப்பை தொடரில் ரியான் பராக் வெளுத்து கட்டி வருகிறார். ஏற்கனவே சத்தீஸ்கர் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 56 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். எதிர்முனையில் நின்றிருந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேற, மறுமுனையில் ஒற்றை ஆளாக நின்று ரியான் பராக் பெரும் போராட்டத்தை வெளிப்படுத்தினார்.