ரிஷ்வானும், ஷகிலும் ஆட்டத்தை எடுத்த விதம் சிறப்பானது - பாபர் ஆசாம்!
நெதர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் வெற்றிபெற்ற பின் பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம், வெற்றிக்கு காரணமாக இருந்த ரிஸ்வான், ஷகில், ஹாரிஸ் ராவுஃப் ஆகியோரை பாராட்டியுள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதியாக இந்திய மண்ணில் பாகிஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துவிட்டது. மேலும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் 275 ரன்கள் அடித்து ஒருமுறை கூட தோற்றதில்லை என்கின்ற தனது சாதனையையும் பாகிஸ்தான் அணி தக்கவைத்து இருக்கிறது.
இன்று நெதர்லாந்து அணிக்கு எதிராக டாஸை இழந்த பாகிஸ்தான் அணிக்கு நான்காவது மற்றும் ஐந்தாவது விக்கெட்டுக்கு வந்த முகமது ரிஸ்வான் மற்றும் சவுத் ஷகில் இருவரும் 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் தந்து அசத்தினார்கள். சிறப்பாக விளையாடிய இருவருமே தலா 68 ரன் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார்கள். இந்த பார்ட்னர்ஷிப் பாகிஸ்தான் அணிக்கு மிடிலில் மிகவும் தேவையாக இருந்தது.
Trending
மேலும் பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களுமே சீராக இருந்தார்கள். பெரிய தவறுகள் எதையும் செய்யவில்லை. நட்சத்திர அதிவேக பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுப் மூன்று விக்கெட் கைப்பற்றி வெற்றிக்கு திருப்புமுனையை உருவாக்கினார். ஆசியக் கோப்பை தொடரில் இருந்து உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்கள் வரை தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வந்த பாகிஸ்தான் அணிக்கு, உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டம் வெற்றியில் தொடங்கி இருப்பது முக்கியமான ஒன்றாகஇருக்கிறது.
இந்நிலையில், வெற்றிக்குப் பின் பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் “ஹைதராபாத் எங்களை ஆதரித்த விதத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். விருந்தோம்பல் மிகச் சிறப்பாக இருக்கிறது. இதன் விளைவாக நான் ரொம்ப திருப்தி அடைகிறேன். பந்துவீச்சாளர்களுக்கு நன்றி. நாங்கள் பந்தில் நன்றாகத் தொடங்கி நடுவில் விக்கெட்டுகளை வீழ்த்தினோம்.
அதே சமயத்தில் பேட்டிங் செய்யும்பொழுது சீக்கிரத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்தோம். இந்த நிலையில் ரிஷ்வானும், ஷகிலும் ஆட்டத்தை எடுத்த விதம் சிறப்பானது. ஷகில் இன்னிங்ஸ் கட்டமைத்தது, அவர் இந்த விஷயத்தில் முன்னேறி இருக்கிறார் என்பதை காட்டுகிறது. முதல் பந்தில் இருந்து எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக இருந்தார்கள். அவர்கள் திட்டத்தோடு ஒட்டி செயல்பட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now