
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இறுதி தொடரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் தோற்று இருந்த நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரில் வலிமையான முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணியின் தொடர்ந்து இரு தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அணியில் யாருக்கு என்ன இடம் என்பதை தெரியாமல் இருப்பதும், சூழ்நிலைகளை புரிந்து கொள்ளாமல் இருப்பதும் தான். அதே சமயத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணியை எடுத்துக் கொண்டால் அவர்கள் இந்த டி20 தொடரில் பந்துவீச்சு பேட்டிங், ஃபீல்டிங் என எல்லாவற்றிலும் மிகச் சிறப்பான திட்டங்களோடு இருக்கிறார்கள்.
நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு ரன்கள் இரண்டு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆனாலும் அடுத்து வந்த பூரன் அதைப்பற்றி எந்தவித கவலையும் படாமல் அவரது இயல்பான ஆட்டத்தை விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். மேலும் இந்தியாவின் பேட்ஸ்மேன்கள் தொடக்கத்தில் ரன்களைச் சேர்க்க முதல் மூன்று ஓவர்களில் முயற்சியை செய்யவில்லை. இதற்கடுத்து விக்கெட் விழும் பொழுது, அதை பொருட்படுத்தாமல் ரன் வேகத்தை அதிகரிக்கவும் அவர்களால் முடியவில்லை.