பிசிசிஐயின் தலைவராக ரோஜர் பின்னி நியமனம்; புதிய நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ!
இந்திய அணியின் முன்னாள் வீரரும், 1983 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தவருமான ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) 91ஆவது பொதுக்குழு கூட்டம் இன்று மும்பையில் நடந்தது. இந்த பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்படி கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து பிசிசிஐ தலைவராக இருந்துவந்த முன்னாள் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலியின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, அவர் பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து விலகினார். பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷாவிற்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படும் நிலையில், தலைவராக இருந்த கங்குலிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படாதது, பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று பெரும் சர்ச்சை வெடித்தது.
Trending
ஆனால், எந்த பதவியாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் அதிலிருந்து விலகித்தானே ஆகவேண்டும் என்ற எதார்த்தத்தை சௌரவ் கங்குலி ஏற்கனவே கூறியிருந்த நிலையில், பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து அவர் விலகினார்.
இதையடுத்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், 1983 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தவருமான ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் பிசிசிஐயின் 36ஆவது தலைவராக ரோஜர் பின்னி பதவியேற்றுக்கொண்டார்.
அதேபோல், ஜெய் ஷா மீண்டும் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.
பிசிசிஐ புதிய நிர்வாகிகள் விவரம்:
- பிசிசிஐ தலைவர் - ரோஜர் பின்னி
- துணை தலைவர் - ராஜீவ் சுக்லா
- செயலாளர் - ஜெய் ஷா
- பொருளாளர் - ஆஷிஷ் ஷெலார்
- இணை செயலாளர் - தேவஜித் சைகியா
- கவுன்சிலர் - கைருல் ஜமால் மஜும்தர்
மேலும், முன்பு பிசிசிஐ பொருளாளராக இருந்த அருண் துமால், இப்போது ஐபிஎல் தலைவராகவும், அவிஷேக் டால்மியா ஐபிஎல் நிர்வாகக்குழுவிலும் தேர்வு செய்யப்பட்டுள்னர்.
Win Big, Make Your Cricket Tales Now