
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் இன்று லக்னோவில் நடைபெற்ற 29ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் மோதின. அதில் தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்று சொந்த மண்ணில் வலுவாக இருக்கும் இந்தியாவுக்கு எதிராக ஏற்கனவே 4 தோல்விகளை பதிவு செய்து அரையிறுதி நழுவ விட்ட இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
இதைத்தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் மற்றொரு தொடக்க வீரர் ஷுப்மன் கில் 9 ரன்களில் கிளீன் போல்ட்டானார். அப்போது வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அடுத்ததாக வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் 4 ரன்னில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்.
அதனால் 40/3 என ஆரம்பத்திலேயே சரிவை சந்தித்த இந்தியாவுக்கு அடுத்ததாக வந்த கேஎல் ராகுல் நிதானமாக விளையாடி கேப்டன் ரோஹித் சர்மாவுடன் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா அரை சதம் கடந்து இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்தார்.