
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமின்றி நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 33அவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து, சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. சண்டிகரில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துது மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இன்றைய போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோவ் நீக்கப்பட்டு ரைலீ ரூஸோவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாட முயற்சித்த இஷான் கிஷான் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் காகிசோ ரபாடா ஓவரின் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ரோஹித் சர்மாவுடன் இணைந்த சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் களமிறங்கியதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். அதன்படி இன்றைய போட்டியில் அவர் தனது 250ஆவது ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ளார்.