இந்திய அணியிலிருந்து இவர்கள் ஓய்வு பெற வேண்டும் - மாண்டி பனேசர்!
இந்திய டி20 அணியில் இருந்து ஓய்வு பெற வேண்டிய சீனியர் வீரர்கள் யார் என்பது குறித்தான தனது கருத்தை முன்னாள் இங்கிலாந்து வீரரான மாண்டி பனேசர் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றோடு வெளியேறிய இந்திய கிரிக்கெட் அணி, இந்த வருடத்திற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி சுற்று வரை தகுதி பெற்றது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே மிரட்டல் வெற்றி பெற்று, வெற்றியுடன் தொடரை தொடங்கிய இந்திய அணி, லீக் சுற்றில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் தோல்வியடைந்தது. மற்ற போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று குரூப் 2 பிரிவில் இருந்து முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் கடுமையாக திணறியது. விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கின் மூலம் 168 ரன்கள் குவித்தாலும், பந்துவீச்சில் அயர்லாந்து, நெதர்லாந்து போன்ற சிறிய அணிகளை விட மிக மோசமாக செயல்பட்டது. இந்திய அணியின் பந்துவீச்சை ஒரு பொருட்டாகவே மதிக்காதது போல் விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள், இங்கிலாந்து அணிக்கு 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியையும் பெற்று கொடுத்தனர்.
Trending
சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் முதன்மையான அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதி போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இன்று வரையில் இந்திய அணியின் தோல்வி குறித்தான தங்களது அதிருப்திகளை முன்னாள் வீரர்கள் பலர் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர், அதே போல் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், இந்திய அணி குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரான மாண்டி பனேசர், இந்திய டி.20 அணியில் இருந்து ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக் மற்றும் அஸ்வின் ஆகியோர் ஓய்வை அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய மாண்டி பனேசர், “அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த விதம் இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவருக்குமே ஏமாற்றத்தை கொடுத்திருக்கும். இனி இந்திய அணியில் சில அதிரடி மாற்றங்கள் இருக்கும் என கருதுகிறேன், சில சீனியர் வீரர்கள் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளது. அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றிக்காக போராடவே இல்லை, அதற்கு இங்கிலாந்து அணி அனுமதிக்கவில்லை என்பதே உண்மை.
போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இங்கிலாந்து அணியே ஆதிக்கம் செலுத்தியது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்களால் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸின் விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் போனது ஏமாற்றம் தான். இது போன்ற அரையிறுதி போட்டியை யாரும் விரும்ப மாட்டார்கள். என்னை பொறுத்தவரையில் ரோஹித் சர்மா, தினேஷ் கார்த்திக் மற்றும் அஸ்வின் ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார்கள் என கருதுகிறேன். இளம் வீரர்களுக்கு வழிவிட்டு சீனியர் வீரர்கள் விலகுவதே இனி இந்திய அணிக்கு பயனுள்ளதாக இருக்கும்.
விராட் கோலியும் சீனியர் வீரர் தான் என்றாலும், அவரை போன்ற பிட்டான வீரர்கள் இந்திய அணியிலேயே கிடையாது. அவர் தற்போது மிக சிறப்பான பார்மில் உள்ளார். எனவே 2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் டி.20 உலகக்கோப்பை தொடரிலும் விராட் கோலி இடம்பிடிப்பார் என நம்புகிறேன். ஆனால் ரோஹித் சர்மா, அஸ்வின், தினேஷ் கார்த்திக் போன்ற சீனியர் வீரர்கள் டி.20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்துவதே இந்திய அணிக்கு நல்லதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now