
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் 2ஆவது டெஸ்ட் போட்டி நாளை கேப் டவுனில் நடைபெறுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்பிரிக்கா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.
மறுபுறம் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தும் சொதப்பிய இந்தியா முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்து 6ஆவது இடத்திற்கு சரிந்த இந்தியா குறைந்தபட்சம் தொடரை சமன் செய்ய 2ஆவது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.
முன்னதாக சென்சூரியன் நகரில் நடைபெற்ற முதல் கோட்டில் ரவீந்திர ஜடேஜா காயத்தால் விளையாடாதது தோல்விக்கு காரணமானது. அதே போல முதல் போட்டியில் அறிமுகமாக களமிறங்கிய பிரசித் கிருஷ்ணா ரன்களை வாரி வழங்கி தோல்விக்கு காரணமாக அமைந்தார். எனவே 2ஆவது போட்டியில் அவர் நீக்கப்பட்டு முகேஷ் குமாரும் அஸ்வினுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.