
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு தொடர்களையும் இழந்தது. டெஸ்ட் தொடரை 2-1 என இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆகி அதிர்ச்சியளித்தது.
அடுத்ததாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. இந்தியாவிற்கு இன்று வந்துவிட்டது வெஸ்ட் இண்டீஸ் அணி. வரும் பிப்ரவரி 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகளும், பிப்வரி 16, 18, 20 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகளும் நடக்கவுள்ளன.
தென் ஆப்பிரிக்காவிடம் மரண அடி வாங்கிய இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அபாரமாக விளையாடி வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. இந்திய அணியில் ஆல்ரவுண்டர்கள், மிடில் ஆர்டர் ஆகிய பிரச்னைகள் உள்ள நிலையில், 2023 உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக அணியை கட்டமைக்க வேண்டிய அவசியம் உள்ளது.