பந்துவீச்சாளர்கள் தங்களது வேலையை சிறப்பாக செய்து கொடுத்தனர் - ரோஹித் சர்மா!
அனைவரும் சொல்வதை போன்று ஷர்துல் தாகூர் ஒரு மேஜிசியனை போன்றவர் தான். தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் அவர் தொடர்ந்து சரியாக பயன்படுத்தி வருகிறார் என்று ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சுப்மன் கில் 112 ரன்களும், ரோஹித் சர்மா 101 ரன்களும், ஹர்திக் பாண்டியா 54 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 385 ரன்கள் குவித்தது.
Trending
இதன்பின் 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் தொடக்க வீரரான பின் ஆலன் டக் அவுட்டாகி பெரும் ஏமாற்றம் கொடுத்தார். ஹென்ரி நிக்கோலஸ் (42), டேரியல் மிட்செல் (24), பிரேஸ்வெல் (26) போன்ற முக்கிய வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் விரைவாக விக்கெட்டை இழந்தனர்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் நீண்டநேரம் தாக்குபிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வே 100 பந்துகளில் 8 சிக்ஸர் மற்றும் 12 பவுண்டரிகளுடன் 138 ரன்கள் எடுத்து கொடுத்தார். டெவான் கான்வேவை தவிர மற்ற வீரர்கள் தங்களது பங்களிப்பை செய்ய தவறி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 41.2 ஓவரில் 295 ரன்கள் மட்டுமே எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதே போல் யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது. இந்தநிலையில், நியூசிலாந்து அணியுடனான இந்த வெற்றி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த ஷர்துல் தாகூரை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
வெற்றி குறித்து பேசிய ரோஹித் சர்மா , “கடந்த சில மாதங்களாகவே நாங்கள் ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறோம். இந்த போட்டியில் நாங்கள் 380+ ரன்கள் எடுத்திருந்தாலும், ஆடுகளத்தின் தன்மை பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் வெற்றிக்கு இந்த இலக்கு போதுமானதாக இருக்குமா என்ற சந்தேகமும் இருந்தது. ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் தங்களது வேலையை சிறப்பாக செய்து கொடுத்தனர்.
அனைவரும் சொல்வதை போன்று ஷர்துல் தாகூர் ஒரு மேஜிசியனை போன்றவர் தான். தனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் அவர் தொடர்ந்து சரியாக பயன்படுத்தி வருகிறார். அணிக்கு என்ன தேவையோ அதை சரியாக செய்து கொடுக்கிறார். ஷர்துல் தாகூர் மூலம் இந்திய அணியின் பந்துவீச்சிற்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now