
மகேந்திர சிங் தோனி மாதிரியான ஒரு ஜாம்பவான் வீரர் விட்டுச்சென்ற இடத்தை, ஒரு அறிமுக இளம் வீரர் நிரப்ப வேண்டும் என்பது, ஒரு மனிதருக்கு கொடுக்கப்படும் அதிகபட்ச அழுத்தம் அதுவாகத்தான் இருக்க முடியும். இப்படி ஒரு அதிகபட்ச அழுத்தத்தைதான் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட்டின் அறிமுக காலங்களில் இளம் இடதுகை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் அனுபவித்தார். அவர் களத்தில் இருக்கும் பொழுது மகேந்திர சிங் தோனி பெயர் சொல்லி ரசிகர்கள் கூச்சலிடும் அளவுக்கு இருந்தது.
இப்படியான அழுத்தங்கள் அவரது பேட்டிங் திறமையை பாதித்ததோடு, அவரது இயல்பான விக்கெட் கீப்பிங் திறமையையும் பாதித்தது. அந்த நேரங்களில் எல்லாம் மூத்த வீரர்களான விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் தொடர்ச்சியாக ரிஷப் பந்துக்கு ஆதரவாக பேசி வந்தார்கள். ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த் பேட்டிங்கில் திரும்ப எழுந்ததோடு, அசர வைக்கும் விக்கெட் கீப்பிங் திறமையோடு மீண்டு வந்தார். அவர் இதற்காக எந்த அளவிற்கு உழைத்தார் என்று, இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் கூறியிருப்பார். அதிரடி பேட்ஸ்மேனான அவர் தன் பாணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியிருந்தார்.
கடந்த வருடம் இறுதியில் அவர் ஒரு மோசமான சாலை விபத்தில் சிக்க, ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் மிகப்பெரிய அதிர்ச்சியில் சிக்கினார்கள். அவர் உடல்நலம் பெறுவதற்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் முழுக் கவனத்தைச் செலுத்தியது. தற்பொழுது அவர் மீண்டு வந்து கொண்டிருக்கிறார். அவர் இல்லாதது இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்தின் திட்டங்களில் பெரிய பின்னடைவை உண்டாக்கி இருக்கிறது.